வேதனையின் விளிம்பில்
வெள்ளி கொலுசு..!
“வெள்ளி கொலுசு மணி; வேலான கண்ணுமணி..!” என்ற பாடல்
கேட்காதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பு இல்லை. கொலுசு, மூக்குத்தி, தோடு, அரைஞான் கயிறு,
ஒட்டியானம் போன்றவை எத்தனை டிஜிட்டல் உலகம் வந்தாலும் நம்மை விட்டு பிரியாது; அந்தளவுக்கு
அது நமது கலாச்சாரப் பண்பாட்டு அணிகலன்களாக மாறி போய்விட்டது. இதன் பயன்பாட்டுக்கு
பிறகு தான் தங்கம் வைரம் வைடூரியம் போன்றவைகள்! ஆம், நாம் சொல்லுவது சாதாரண
குடும்பங்களின் வாழ்நிலை; அதானி, அம்பானி போன்றவர்களின் வாழ்நிலையை அல்ல! இது
ஏழைகளின் இதயத்தை குளிர வைக்கும் இந்த வெள்ளி ஆபரணங்கள் தயாரிப்பு தொழில் இன்று
தட்டுத் தடுமாறி, நடமாட முடியாத நிலையில் இருக்கிறது; அதன் தொழிலாளர்களும், அவர் தம்
குடும்பங்களும் வேதனையின் விளிம்பில் இருக்கிறார்கள்.
அனைவரின் எதிர்ப்பார்ப்புகளை போல் தான் இந்த
வெள்ளித் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் எதிர்ப்பார்ப்புகளும் இருந்தது. மோடி வந்தால்
ஓடோடி வந்து நமக்கு உதவுவார் என்று! ஆனால் எதிர்பார்த்திருந்த மக்களுக்கு, தங்களது
வாழ்வில் மாற்றம் வரும் என்றிருந்தவர்களுக்கு வழக்கம் போல் ஏமாற்றம் தான் பரிசாக வந்துள்ளது;
அதற்குள் ஏன் அவசரம் இன்னும் ஆட்சி காலம் இருக்கிறதே என்றுகூட சிலர்
வாதிக்கிடக்கூடும்! ஆனால் அதுவரை அடி வயிற்றில் ஈரத் துணியை போட்டுக் கொள்வதா?
இதிலே ஒரு கஷ்டம் என்ன வென்றால் இத்தொழில்
குறித்து துல்லியமான புள்ளி விபரங்களை சேகரிப்பதில் மிகுந்த சிரமம் இருக்கிறது; தொழிலில்
பணிபுரிவோர், ஈடுபடுவோர் எல்லாம் தோராயமாகத் தான் சொல்ல முடிகிறது; குறிப்பிட்ட
எடையில் வெள்ளி வாங்குவது; அதில் 20% உற்பத்திக்காக எடுத்துக் கொள்வது; அதை ஆபரணமாக்கி
மொத்த வியாபாரிகளிடம் தருகிறபோது அது 100% மாக கணக்கிட்டுக் கொள்வது; இதனால் பணம்
பரிமாற்றம் என்பது ‘மாய மானாக’ உள்ளது; அது சிலருக்கு மட்டுமே தெரிந்ததாக அதாவது
இன்றைய சூழ்நிலையில் ‘ஆன் லைன்’ வர்த்தகர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக
இருக்கிறது. இருந்தாலும் கீழ்கண்டபடி நடக்கும் வர்த்தகத்தைப் பார்க்கிறபோது
மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடம்; அதிலும்
சேலம் மாவட்டம், சேலம் ஒன்றியம் மற்றும் மாநகர பகுதிகள் தான் ‘வெள்ளிப்
பட்டறை’க்கு முதல் இடம்! இங்கு இத்தொழில் சுமார் 4 லட்சம் தொழிலாளர்களும் அவர் தம்
குடும்பங்களும், இதை நம்பி வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக சுமார் 3 லட்சம் பேர்
அன்றாட கூலித் தொழிலாளர்களாகவும், சுமார் 1 லட்சம் சிறு குறு நடுத்தர
உற்பத்தியாளர்களாகவும் இருக்கிறார்கள்.
ஒரு நாளைக்கு சராசரியாக 1.5 டன் ஆபரணங்கள்
உற்பத்தியாகி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. அப்படி என்றால் நாளொன்றுக்கு
சராசரியாக 1 டன் என்று வைத்துக் கொண்டால்கூட, அதில் 50% (500 கிலோ) வெள்ளி ஆபரணமாக
ஆக்கப்படும்போது, அதன் வாங்கிய விலைக்கே கணக்கிட்டால், ரூ18 கோடி நாள் ஒன்றுக்கு
புலக்காட்டம் உள்ளது. அது வருடத்திற்கு கணக்கிட்டால், ரூ6570 கோடி வரவு-செலவு
நடக்கிறது சேலம் மாவட்டம் சேலம் ஒன்றியம், சேலம் மாநகரம் ஒருபகுதியில் மட்டுமே
நடக்கும் இத்தொழில் மூலம் என்றால், அது 100% மும் சேர்த்தால், அது இன்னொரு மடங்கு
சேர்ந்து வரவு-செலவு நடக்கிறது என்று அர்த்தம். இந்த தொழில்தான் தற்போது சூறாவளி
நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது.
சில்வர் என்றழைக்கப்படும் உலோகம்தான் வெள்ளி.
இது தங்கம் போல் தன்னைத்தானே யாருக்கும் பயன்பாட்டு பொருள் அல்ல. தங்கத்தில்
செம்பு கலந்தால்தான் அது ஜொலிக்கும். அதுபோல் வெள்ளியிலும் செம்பு, துத்தநாகம்,
காட்மியம் என்கிற உலோகங்கள் தேவையான அளவு கலக்கிறப்போது தான் இதுவும் ஜொலிக்கிறது.
‘பார்’ என்று அழைக்கப்படும் சுத்த வெள்ளி (99.9%)
வாங்குவர்; அதில் குறிப்பிட்ட விகிதம் செம்பு, துத்தநாகம், காட்மியம் கலப்பர்.
அதன்பின் இது ஆபரணமாக வருகிறபோது 16 படிகளை அது கடந்து வருகிறது. அதாவது—
1. பார் 2. உருக்குதல் 3. கம்பி உருவாக்கல் ) 4
கன்னி கோர்த்தல் 5. லூஸ் ஆக்கல் 6. சலங்கை (முத்து) ஆக்கல் 7. பூ வைத்தல் 8.
அரும்பாக்கல் 9. ஜதையாக்கல் 10. அர மெருகு, கருப்பு மெருகு (கருப்பு கலராக
இருப்பதை சல்பர், சைனைட், காஸ்டிக் சோடா, சோப்பு ஆயில் போன்றவை கலந்து வெண்மை
ஆக்கல்) 11. பட்டை தீட்டுதல் 12. கலர் வைப்பது (எனாமல்) 13. மிஷின் பாலீஷ் (100%
வெண்மை ஆக்கல் 14. சீர் செய்வது 15 பொடி வைத்தல் 16 தரச்சான்று பெறுதல் என பல
கட்டங்களை அது கடந்துதான் கடைக்கு கொலுசாகவோ, அரைஞான் கொடியாகவோ வருகிறது. உடலில்
அணியும் அணிகலன்கள் பல்வேறு ரசாயன கலவைக்களை உட்கொண்டே வந்து நம் உடல்களில் ஒட்டிக்கொள்கிறது;
அது அதன்பின் தன் வேலைகளை உடலில் காட்டி வருகிறது. உணவில் மட்டுமே விஷமில்லை;
உடையிலும், ஆபரணங்களிலும் இருக்கிறது ரசாயன விஷங்கள் என்பதற்கு இதில் கலக்கப்படும்
ரசாயன கலவைகளே சாட்சி!

இவற்றில் 2 கட்டத்தில் மட்டுமே (லூஸ், ஜதை)
இத்தொழிலில் ஈடுபடும் 3ல் 2 பகுதியினர் உள்ளனர். இதில் தற்போது ஏற்பட்டு உள்ள
நெருக்கடி தொழிலாளர் களை பெரும் பாதிப்புக் குள்ளாக்கி உள்ளது. என்றாலும் உற்பத்தி யாளர்கள்
தரப்பில், ”எங்களுக்கு மட்டுதான் நஷ்டம்; கூலி பெறு வோருக்கு எந்த பாதிப்பும் இல்லை”
என்கிறார்கள். ஆனால் தொழிலாளர்கள் தரப்பில், ”அப்படி ஒன்றும் கிடையாது
எங்களுக்கும் கூலியில் பிடித்துக் கொள்கிறார்கள்” என்கிறார்கள்.
உற்பத்தியாளர்களுக்கு என்ன பாதிப்பு? அதாவது லூஸ்
செயின் பட்டறையில் 1கிலோ செயின் செய்து கொடுத்தால் 20 கிராம் (2%) வெள்ளி
கிடைக்கும்; அப்படியென்றால் ரூ36,000க்கு 1கி லோ வெள்ளி விற்கிறபோது 2% வெள்ளியால்
ரூ720 வருமானம் கிடைக்கிறதென்றால், விலை குறையும் போது, அது ரூ600 ஆகவோ அல்லது
ரூ500 ஆகவோ குறைந்து விடுகிறது; ஆனால், “லேபருக்கு
நாங்கள் அப்படி குறைத்து தர முடியாது; ரூ36,000 விலையில் வாங்கும் போதும், அது
ரூ30,000 மாக குறைந்த போதும் லேபருக்கு நாங்கள் ரூ400தான் தருகிறோம்; ஆனாலும்
இது போதுமானது என்று கூறமுடியாது; கட்டட வேலைக்கு சென்றால்கூட ரூ500-600
கிடைக்கிறது; அதற்கு போய்விடுகிறார்கள்; அதனால் இங்கு லேபர் பற்றாக்குறையும்
கடுமையாக இருக்கிறது; இதற்குமேல் எங்களால் கூலி உயர்த்தியும் தர முடியாத நிலையில்
இருக்கிறோம் என்கிறார்கள் உற்பத்தியாளர்கள். “அந்த ரூ400 கூலிக்கூட வருடத்தில்
எல்லா நாட்களும் தருவதில்லை; பாதி நாட்களுக்கும் குறைவாகத் தான் வேலை
தருகிறார்கள்; கூலியிலும் ஏற்றம் இறக்கம் இருக்கு” என்கிறார்கள் தொழிலாளர்கள்.
ஆனால் எந்த கஷ்டமும் இல்லாமல் லாபமாக தொழில்
செய்பவர்கள் கடைவியாபாரிகளே! “கடை வியாபாரிகள் இவ்வண்ணம் ஏற்றம், இறக்கத்திற்கு
தகுந்தாற்போல் ஆபரணங்களை கூட்டிக் குறைத்து விற்பதில்லை; வியாபாரிகள் ‘செய்கூலி
சேதாரம்’ என்று சொல்லி விலையை குறைக்காமல் விற்று விடுகிறார்கள் லாபத்திற்கு” என்கிறார்கள்
உற்பத்தியாளர்கள். இது உண்மை!
இதன் இயங்குதளம், வர்த்தக பரிமாற்றம் எப்படி
இருக்கிறத்தென்றால், இடத்திற்கு இடம் சற்று வித்தியாசப் படுகிறது. சேலத்தில் 1
கிலோ வெள்ளி வாங்கி வருகிறார்கள் என்றால், அதில் 8% அளவில் (அதாவது சுமார் 1 கிலோ
ஆபரணம் செய்தால் 60 கிராம் முதல் 80 கிராம் வரை) உற்பத்தியாளர்களுக்கு கமிசன்; இது
ஆபரணாகி போகிறபோது 80% வெள்ளி; 20% இதர உலோகங்கள் சேர்க்கப்பட்டு, மொத்தம் 100%
மாக வியாபாரிகளிடம் விற்பனைக்கு போகிறது. உற்பத்தியாளர்கள் இந்த 8% வெள்ளியை
எடுத்துத்தான் இவர்கள் ஆபரணத்தில் சேர்க்கும், அல்லது ஆபரணம் உருவாக்க தேவைப்படும்
இதர பொருட்களை வாங்கிக் கொள்வது, கூலி தருவது, (அதாவது கட்டியை உருக்குவது முதல்
16 மட்டங்களுக்கும் கூலி கழித்தல் வரை) அடுத்து “அல்லக்கைத், தொல்லக்கைகளுக்கு”
அழுவது (இது குடிசைத்தொழில் என்பதால் லைசென்ஸ் ஏதுமில்லை) போன்றவற்றை செய்தாக
வேண்டும்; இதையும் தாண்டித்தான் இதில் உற்பத்தியாளர்கள் தங்களுக்கு கூலி
எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த தொழிலுக்கு நெருக்கடிக்கு காரணம்— வெள்ளி
விலை திடீரென்று குறைவதும், கூடுவதும் தான்! வெள்ளி வாங்கி வரும்போது இருந்த விலை,
அதை ஆபரணமாக்கி விற்கும் போது குறைந்து விட்டால், உற்பத்தியாளருக்கு நட்டம்;
கூடினால் லாபம்! ஆபரங்களின் விலையை நிர்ணயம் செய்வது அரசு அல்ல; பங்கு சந்தை
பகவான்கள்! அந்த பங்கு சந்தை பகவான்கள் பெரும்பாலும் கார்பரேட் கனவான்கள்! கார்பரேட்
கனவான்கள் ஆட்சியாக மாறிவிடும் மோடி ஆட்சியென்று, இந்த வெள்ளி தொழில் சிறு
உற்பத்தியாளர்கள் கனவு கண்டு இருப்பார்களா? என்று தெரியாது! இந்த வெள்ளித்தொழில்
போல்தான் அனைத்து சிறு தொழில்களும் இன்றும் சிக்கிச் சீரழிந்து வருகிறது; இந்த
விலை இறக்கத்திற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது; நீங்கள் யூகிப்பது சரியே; ஆம்! வெள்ளி
தங்குதடையற்ற இறக்குமதியே!
வெள்ளி உற்பத்தியாளர்கள் பட்டியலில்
இந்தியாவுக்கு 13வது இடம்; முதல் இடம் மெக்சிகோ; இரண்டாவது இடம் பெரு; மூன்றாவது
இடம் சீனா! இந்த நாடுகள்தான் இறக்குமதி செய்து தள்ளுகிறார்கள். வெள்ளி பயன்பாடு
இந்தியா தான் முதலிடம்! வெள்ளியாகவோ, ஆபரணமாகவோ தங்கு தடையற்ற இறக்குமதியும், ஆன்
லைன் வர்த்தகமும் தான் இந்த நெருக்கடிக்கு காரணமாக இத்தொழிலில் ஈடுபட்டு வருவோர்
கூறும் கூற்றாக இருக்கிறது!
கூலிக்கு வாங்கி வந்து தொழில் செய்யும் அரிசிபாளையம்
வி.வெங்கடேஷ் கூறுகிறார்—
“நானு எங்க
மொதலாளிக்கிட்ட கூலிக்குத்தான் வாங்கிட்டு வந்த தொழில் செய்றேன்; ஆன் லைன்
வர்த்தகம் தான் காரணம்; ஒருத்தரு ஆன் லைனில வெள்ளியை உட்காந்த இடத்தில வாங்கிறாரு;
அதை கால் மணி நேரத்தில அவரு அதை இன்னொருத்தன் தலையில லாபம் வச்சி கட்லன்னா, அந்த
வெள்ளி அவன் வீட்ல டோர் டெலிவரி ஆகிவிடும்; அப்டி ஆகாம இருக்க அல்லது மேலும் கால
நீடிப்பு செஞ்சிக்க, அதுக்கு அவன் கமிசன் கொடுத்து அழுவனும்; இப்படி இவங்க பண்ற
கூத்துத் தான் எங்க தலையில வந்து எறங்குது இடியா; இத அரசாங்கம்
தலையிட்டு சரி பண்ணலன்னா, நாங்க சாவ வேண்டியதுதான்; விவசாயி தற்கொல மாதிரி வெள்ளி பட்டற
தொழிலாளி தற்கொலன்னு இனி செய்திதான் வரும்” என்கிறார்.
அரியாக்கவுண்டன்பட்டி காமராஜ் நகர் சிறு
உற்பத்தியாளர் எம்.மூர்த்தி சொல்கிறார்—

“நாங்க
இந்த தொழிலுக்கு ஏன்டா வந்தமின்னு இருக்குது; இதல நா சிறு வயசில இருந்து
இருக்கிறதால வேற தொழிலும் எனக்கு தெரியாது; அதனால இத உடவும் முடில; வெள்ளி வெல ஒரு
லெவல்ல இருந்தாத்தான் தொழில் பண்ண முடியும்; இல்லீன்னா முடியாது; கூலிக்காரங்களுக்கு
பிரச்சன இல்ல; வியாபாரிக்கும் பிரச்சன இல்ல; நடுவுல நாங்க மாட்டிகிட்டு
முழிக்கிறோம்; எங்களுக்குத்தான் பிரச்சன; மெயின் காரணம் தொழில் நெருக்கடிக்கு
இறக்குமதிதான்; இறக்குமதிக்கு ஒரு கட்டுபாடு வேணும்; அத மோடி அரசும், நம்ம லேடி
(அம்மா) அரசும் செய்யனும்; அதே மாதிரி ஆன்லைன் வர்த்தகத்தில இருந்து இத எடுக்கனும்
(விதிவிலக்கு தரனும்); எங்களுக்கு மார்ஜன் 20% இருந்து ஒயத்தி 30%மாக கொடுக்கணும்;
இது குடிசை தொழிலிங்கிறதால ஏராளமான தொல்ல; முனிசீப்புல இருந்து யாராரோ வந்து எங்கல
புடுங்கி எடுக்கறாங்க; சேலத்தில உள்ள வியாபாரிங்கக்கிட்ட வித்தா தப்புச்சிக்கலாம்;
கர்னாடகா, ஹைதராபாத் அங்க, இங்கன்னு கொண்டு போனா போற வழியில சேலத்துலயும் சரி;
வெளி மாநிலத்திலயும் சரி; எந்த பாதுகாப்பும் இல்ல; வழியல போலிஸ் லைசென்ஸ்ச கொடு,
அதக்கொடு, இதக்கொடுன்னு அடிச்சே பாதிக்குப்பாதி புடுங்கிக்கிறாங்க; ஆனா மொதலாளிங்க
டன்னு கணக்குல கொண்டு போறாங்க அவங்க போலீசு கண்டுக்கிறதே இல்ல; எங்க பொழப்புதான்
நாயி பொழப்பா போச்சி!” என்றார்! விட்டால் அழுது விடுவார் போலிருந்தது!
இது குறித்து சிஐடியு மாவட்ட நிர்வாகியும்,
இத்தொழிலில் அனுபவருமான பி,ராமமூர்த்தி கூறுகிறார்---
“இது வந்துங்க நச்சு புடிச்ச வேலங்க; குடும்பமே
சின்னது பெரிச்சின்னு பாடுப்பட்டாத்தா நாலு காசு பாக்க முடியுமுங்க; இந்தியாவிலேயே
இங்க தாங்க இந்த தொழில் இருக்குது; எல்லா தொழிலும் மாதிரி தான் இதலேயும்
நெருக்கடிங்க; மத்திய அரசின் கொள்கை தான் இதுக்கு காரணம்; அத மாத்தாம இத
(நெருக்கடிய) மாத்த முடியாது; மாநில அரசு நெனச்சா இந்த தொழில பாதுகாக்கலாம்;
மத்திய அரசிடம் வாதாடியோ, போராடியோ வெள்ளி இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கலாம்;
நாங்களும் தொழிலாளர்களையும், சிறு உற்பத்தியாளர் களையும் பாதுக்காக்கிற
போராட்டத்தில் இறங்கி இருக்கிறோம்; இதுல ஒரு 4 லட்சம் குடும்பம் இருப்பாங்க; சேலம்
மாநகரத்தில் இது முக்கியமான தொழிலு மட்டுமல்ல வாழ்வாதார பிரச்சன; மாவட்ட ஆட்சியர்
இப்பதான் புதுசா வந்திருக்கிறாரு; அவரும் அரசு கவனத்துக்கு கொண்டு போய், நெருக்கடி
தீர வழி காணனுமின்னு கேட்டுக்கிறேன்!” என்றார்
இறக்குமதிக்கான காரணம் உள்நாட்டு உற்பத்தி
வெகுவாக குறைந்ததே. ஆம், 1927ஆம் ஆண்டு உற்பத்தி 18,73,924 டன்; 2012 ஆம் ஆண்டு
உற்பத்தி 3,28,000 டன். இதற்கான மைன்ஸ் (சுரங்கம்) ஆந்திரா மாநிலம் விசாகபட்டிணம்,
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர், ஜார்கண்ட் மாநிலம் தன்பாத், சிங்பூம், கர்னாடகா
மாநிலம் ரெய்ச்சூர் ஆகிய இடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி
குறைவுக்கான காரணம் சரியாக தெரியவில்லை; இருந்தாலும் உலகமய கொள்கையே காரணம்.
உதாரணமாக சேலம் மாவட்டத்தில் ‘மேக்னசைட்’ என்கிற
கனிமம் உற்பத்தி செய்யும் மைன்ஸ் இருக்கிறது; உலகமய கொள்கை அமலாகுவதற்கு முன்
தொன்னூறுகளில் 7 ஆயிரம் பேருக்கு மேல் வேலை செய்து வந்தனர். ஆனால் தற்போது 900
பேருக்குள் தான் வேலை செய்கின்றனர். மைன்ஸ்சில் மேக்னசைட் இல்லை என்பதால் அல்ல;
இந்த ஆட்குறைப்பு! இங்கு உற்பத்திக்கு ஆகும் செலவு, தொழிலாளர் நலன் சட்டங்கள் போன்ற
‘தொல்லைகள்’ இல்லாமல், வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் ‘மேக்னசைட்’க்கு
விலை குறைவாக பெற முடிகிற காரணத்தினால், இந்த மைன்ஸ்சில் படிப்படியாக ஆட்களை
குறைத்தும், அவுட் சோர்சிங் முறைக்கு மாறினாலும், உற்பத்தி குறைக்கப்பட்டு
விட்டது; இதுதான் நாட்டில் உள்ள அனைத்து ‘கனிம மைன்ஸ்’களின் நிலமைகளும்!
ஆகவே வெள்ளியை இறக்குமதி செய்யும் பன்னாட்டு
முதலாளிகள் குழுமங்களே விலையை தீர்மாணிக்கிறார்கள். அவர்களின் நலன் சார்ந்தே அது தீர்மாணிக்கப்படுகிறது.
இதிலே “இறக்குமதி, இறக்குமதி” என்று கூறுகிறபோது, இத்தொழில் ஈடுபடுவோர் எல்லோரும்
ஒத்த குரலில் கூறுகிறார்கள்... “சீனா தான் இறக்குமதி செய்து எங்க பொழப்பைக்
கெடுக்கிறது” என்று! பொதுவாக அரசின் கொள்கை தான் காரணம் என்பதற்கு பதிலாக, இந்திய
ஊடங்களும் சரி, உள்ளூர் மேளங்களும் சரி சீனா எதிர்ப்பையே கக்குகின்றன.
ஆனால் இந்த வெள்ளி தொழில் விசயத்தில்
இறக்குமதியில் ‘பெரிய அண்ணனாக’ மெக்சிக்கோ இருக்கிறது; அதை வசதியாக மறைத்துவிட்டு,
சீனா மீது ஏன் வன்மத்தை விதைக் கிறார்கள்? என்று தான் தெரியவில்லை; அதிலும்
அரசியல் தான்! கம்யூனிச எதிர்ப்புக்கு துரும்பாக எது கிடைத்தாலும் அதை பயன் படுத்தப் படும்
குறுகிய (சின்ன)புத்தி; அதுவே சீனா எதிர்ப்பாளர்களின் உத்தி! சீனாவாக
இருந்தா லென்ன? யாராக இருந்தா லென்ன? இந்திய பாரம்பரிய தொழில்களை அழிக்க விழைவோர்களை
எதிர்த்து நாட்டைக்காப்பதே இன்றைய தேசபக்த பணி; அதைத்தான் இந்திய இடதுசாரிகள்
குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்கிறது.
சமீபத்தில் விசாகப்பட்டிணத்தில் நடந்து முடிந்த சிபிஐ(எம்)
21வது அகில இந்திய மாநாட்டின் தீர்மாணம் கூறுகிறது— “முறைசாராத்தொழில் துறையில்
பணிபுரிவோரில் பெரும்பங்கு வகிப்பவர்கள் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள்தான்; அவர்களின்
நிலைமைதான் தினக் கூலிகளாக, சமூக பாதுகாப்பு இல்லாதவர்களாக இருப்பது நெஞ்சத்தைப்
பதைக்க வைக்கிறது; இதர வேலை நிலைமைகளோடு ஒப்பிடுகையில் இது மிகவும் மோசமானதாக
உள்ளது!” என்கிறது. இடம் பெயர்ந்தவர்களின் நிலைமையை இவ்விதம் விளக்கினாலும், ஏறக்குறைய
இதுதான் இடம் பெயராதவர்களின் நிலைமையும்கூட! (தமிழ்நாட்டில் (சேலம்) இருந்து
சென்று ஹைதராபாத் மற்றும் ரெய்ச்சூரில் ஆயிரக்கணக்கில் இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்
என்பதும் கூடுதல் செய்தி!)
லட்சக்கணக்கான ஏழை எளிய
நடுத்த மக்களின் வாழ்வாதாரத்தை அவலநிலையில்
இருந்து மீட்க மத்திய மாநில அரசுகள் எடுக்குமா? எடுக்கவில்லையென்றால் எடுக்க வைக்க
வேண்டும்! அந்த அளவுக்கு இத்தொழிலில் உள்ளவர்கள் ஆரம்பம் முதல் அனலில்
அல்லாடுவது போல், அனைவரின் மனங்களிலும் ‘அனல்’ ஜுவாலை விட்டு எரிந்துக் கொண்டுதான்
இருக்கிறது!
-பி.தங்கவேலு.
22.07.2015 (இன்று) தீக்கதிரில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது; நன்றி.