“காக்கா முட்டை..!”
‘காக்கா முட்டை’யைக் காலதாமதமாகத் தான் பார்க்க நேர்ந்தது! இதில் ‘காக்கா
முட்டை’யை மட்டுமல்ல...! குயில் முட்டையைப் (காக்கை ஏழையெனில், குயில் பணக்காரன்
என்று வைத்துக் கொள்க) பற்றியும் இந்த ‘காக்கா முட்டை’ பேசுகிறது என்பது தான் இந்த
திரைப் படத்தின் இன்னொரு பரிமாணம்! கதை சிறுகதையே...! ஆனால் திரைக்கதையும்,
உரையாடலும் நெடுங் கதையே! அதோடு, அந்த இரு சிறுவர்கள் மட்டுமல்ல, கதையில் வந்துள்ள
அத்தனை பாத்திரங்களும் அபாரம்!
தமிழ் திரைவானம் மெல்ல மெல்ல நகருகிறது நல்ல நல்ல
படைப்புகளை நோக்கி என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் ‘காக்கா முட்டை!’ அனேகமாக
சிறுவர்களை பற்றிய புதிய கோணத்தில் வந்துள்ள முதல் திரைப்படம் என்றே தோன்றுகிறது;
அதுவும் இன்றைய உலகமய சூழலில் ஏழை குழந்தைகளில் ஏக்கங்களை வர்க்கக் கோணத்தில் வன்மம்
இன்றி பதிவு செய்து உள்ள முதல் தமிழ் திரைப்படம் ‘காக்கா முட்டை’யே! அதற்காக இயக்குனர்
எம்.மணிகன்டன், தயாரிப்பாளர்கள் நடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் மிகுந்த
பாராட்டுக்குரியவர்களே!
இந்தப் படத்திற்கு இன்னொரு பெயர்..! ‘முகவரி இல்லாதவர்கள்’
என்றுக் கூட சொல்லாம். சென்னை சைதை தொகுதிக்குட்ட ஒரு குப்பம் (சிலம்ப்). அங்கு
எளிய ஒரு குடும்பம். இரண்டு சிறுவர்கள்; அம்மா, ஆயா..! அக்கம் பக்கம் குடும்பங்கள்;
அப்படியே கொஞ்சம் தாண்டிப் போனால் ரயில் நிலையம்; சிறுவர்கள் விளையாடும்
பாராமரிப்பற்ற நிலம்; அதில் மரம் செடி கொடிகள்... இப்படியாக படம் விரிகிறது. சென்னை
குப்பத்தைக் கண்முன் தத்ரூபமாக கொண்டு நிறுத்தி விட்டார்கள்.
துவக்கமே தூள்! பெயரில்லாத சிறுவர்கள். தனக்குத்தானே ‘சின்ன
காக்கா முட்ட, பெரிய காக்கா முட்ட’ என பெயரிட்டுக்கொள்கின்றனர். சின்ன காக்கா
முட்ட படுக்கையிலேயே மூத்திரம் பேய்ந்து விடுவதில் துவங்கி, படுக்கையில் மூத்திரம்
பேய்யாத ‘மெச்சூரிட்டி’ ஆன சின்ன காக்கா முட்ட வரையென கம்பீரத்தோடு படம் முடிகிறது.
எதை சொல்லுவது; எதை விடுவது என்றே எனக்கு தெரியவில்லை!
இதைச் சொன்னால், அது விட்டு விடுமோ, அதை சொன்னால் இது விட்டு விடுமோ என்று
பயப்படுமளவுக்கு படத்தை பல பரிமாணங்களில் கொண்டு சென்று உள்ளார் காமிரா-உரையாடல்-இயக்குனர் எம்.மணிகண்டன்;
ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து எடுத்துள்ளார்... மன்னிக்கனும்; செதுக்கி உள்ளார் காமிரா மேன் எம்.மனிகண்டன்! மணி மணியான உரையாடல்...! அப்பப்பா..! ஏசி தியேட்டரையே சூடாக்கி,
பின் குலுங்க குலுங்க சிரிக்க வைத்து வயிரை ஒரு பதம் பார்த்து விடுகிறார்... ‘காக்காமுட்டை’ எம்.மணிகண்டன்!.
மீண்டும் கதைக்கு வருவோமா? அந்த விளையாட்டு மைதானத்தில்
இருக்கும் ஆலமரத்தில் இருக்கும் முட்டைகளை எடுத்து, காக்கைக்குக் சோறுக் கொடுத்து,
அதை ‘ஏமாற்றி’ அதன் முட்டைகளை எடுத்து குடிப்பதில்தான் என்னே அலாதி...! அலாதி
மட்டுமா..? அங்கே அரும்பும் பொதுவுடமை சிந்தனையை மிகமிக எதார்த்தமாக பொருத்தி
உள்ளதை பாருங்கள்! பெரிய சிறியவன் சாப்பிடும்போது அம்மாவுக்கு தெரியாமல் சாப்பிடும்
சோறு கொஞ்சத்தை, பேன்ட் பாக்கெட்டில் எடுத்து வந்து, காக்கைக்கு வைத்துவிட்டு,
மரத்தில் ஏறுவான்; சின்ன சிறுவன் “கா..! கா..!” என கரைவான்; பெரிய சின்னவன்
மரத்தில் ஏறுவான்; காகம் சோறு திங்க வந்துவிடும்!
இருந்தாலும் காகம் கொத்தி விடுமோ என்ற பயத்தில் மேலும்,
கீழும் பய உணர்வோடு பார்த்துவிட்டு, காக்கைக் கூண்டை நெருங்குவான்; அதில் மூன்று
முட்டை இருக்கும்; கீழிருந்து சின்ன சிறுவன் ‘எத்தனை முட்டை இருக்கிறது என்பான்’; மேலே
இருந்து கொண்டு, ‘மூன்று’ என்பான் பெரிய சிறுவன்; அதோடு ‘மூன்றையும் எடுத்து வரவா?’
என்பான்; அதுக்கு சின்னவன் சொல்வான்..! ‘வேண்டா வேண்டா ஆளுக்கு ஒரு முட்டை;
உனுக்கு ஒன்னு; எனக்கு ஒன்னு; காக்காவுக்கு ஒன்னு!’ என்பான் சின்னவன்; அது மாதிரியே
பெரியவனும் செய்வான்! என்ன ஒழுக்கு..! என்ன நேர்த்தி..! பார்த்தீர்களா..? இதுபோல்தான்
படம் முழுதும் பார்க்க முடிகிறது!
‘காக்கா’ முட்டையோ ‘குயில்’ முட்டையோ சிறுவர்களின் உணர்வு,
உணவுகளுக்கு சரியான மதிப்பளிக்கப்படுவதில்லை பெற்றோர்களால் என்பதை மிக நுட்பமாக
காட்சிப் படுத்தி இருக்கிறார் இயக்குனர்! காக்கா முட்டை எடுக்கும் இடத்தை பண ‘முதலை’
ஒன்று வாங்கி பணம் காய்க்கும் ‘வாத்தாக’ வானளாவ வர்த்தக வளாகம் அமைத்து, அதற்கு திறப்பு
விழாவிற்கு வரும் நடிகர் சிம்பு பீட்சா சாப்பிடுவதிலிருந்து கதை அடுத்த
கட்டத்திற்கு அலுங்காமல் குலுங்காமல் நகர்த்தி செல்லப்படுகிறது.
‘பீட்சா’ சாப்பிட
ஆசைப்பட்டு, அப்படி அப்படியே புதுச்சட்டை வாங்குவது... என பற்பல வேலைகளுக்கு போவது..! அதாவது டாஸ்மாக்
கடையில் குடித்துவிட்டு குப்புற கிடப்பவர்களை வண்டி வைத்து இழுக்க முற்படும்
காட்சி..! வீட்டு நாய்க்குட்டியை விற்க அலைந்து திரிந்து ஆட்டோக்காரரிடம்
நாய்க்குட்டிக்கு ரூ25,000 விலை சொல்லுவது..! இப்படியாக படத்தில் சுவாரஸ்சியம் பெருக்கெடுத்து ஓடுவது அருமையோ அருமை!
ஊடகங்களையும்,
அரசியல் வாதிகளையும், அரசியல் வாதிகளின் சிட்டாள்களையும், காவல் துறையையும் எப்படி
முதலாளிமார்கள் சாமார்த்தியமாக பயன்படுத்துகிறார்கள் என்பதை யும் மிக நேர்த்தியாக
வடிக்கப்பட்டிருக்கிறது நையாண்டியாக யார் மனதும் புண்படாமல்! இந்த உத்தி டாப்!
ரயில்வே லைன் மேனாக, குப்பத்தில் வரும் அரசியல் வாதிகளின் சிசியர்களாக, வணிக வளாக
ஆலோசகராக, எல்லாவற்றிக்கும் மேலாக சிறுவர்களின் அம்மாவாக, ஆயாவாக வருவோர் எல்லோரும்
நடித்து உள்ளார்கள் என்று சொல்ல முடியாது; வாழ்ந்து உள்ளார்கள்! ‘சின்ன காக்கா
முட்டை, பெரிய காக்கா முட்டை’ யாக வரும்
சிறுவர்கள் (விக்னேஷ், ரமேஷ்) சிறு பிசிறின்றி எப்படித் தான்
அப்படி நடித்தார்களோ? ஆச்சரியமாக இருக்கிறது; நம்பவே முடியவில்லை; இவர்கள் மீனவ குப்பம் சார்ந்த உண்மை கதாநாயகர்கள் என்பது கூடுதல் செய்தி!
எப்படித்தான் அவர்களை இயக்குனர் இயக்கினாரோ? எல்லாம்
மில்லியன் டாலர் கேள்விகள் எழுகிறது! 'பீட்சா' வுக்காக ஆயா முயற்சிப்பதும், அந்த
காட்சியை அந்த சிறுவர்கள் நாவில் எச்சில் ஊற ரசித்து ருசிப்பதும் இறுதியில்
எதிர்பாரா திருப்பமாக ‘காக்கா முட்டை’களே அதே கடையில் ஒரிஜினல் பீட்சாவை
ருசிக்கிறபோது, ‘டேய்! ஆயா செஞ்ச தோசையே நல்லா இருந்துதடா’ என்பதும் ரசனையின்
உச்சம்! இந்த படத்துக்கு சிறப்பு அம்சமே சென்னை பாஷையில் உரையாடல்
பிசுறின்றியிருப்பதே!
இந்த காக்கா முட்டைகளுக்கு இதில் கிடைத்த விருதுகளைபோல்
இன்னும் இன்னும் இன்னும் கிடைக்க வாழ்த்துவோம்! அதுபோல் இதுபோல் அற்புதமான திரை ஓவியங்களை படைக்க எம்.மணிகன்டன், தனுஷ்,
வெற்றிமாறன் கூட்டணிக்கு ‘ஜே’ போடுவோம்! உழைப்பாளிகளின் உளவியல்களை வர்க்கக்
கண்ணோட்டத்தில் மிக லவகமாக வித்தியாசமான கோணத்தில் கொடுக்கப்பட்டுள்ள “காக்கா
முட்டை”யை இருகரம் ஏந்தி பெறுவோம்; குடும்பத்துடன் சென்று பார்த்து ஆதரவு தருவோம்!
-பி.தங்கவேலு