“கல்வி உரிமைச்சட்டத்தைக் கடையருக்கும் கைவசமாகுவோம்!”


நம் இந்திய திருநாட்டில்
சட்டங்களுக்கு ஒன்றும் பஞ்சமில்லை! உணவு பாதுகாப்புச் சட்டம்; நில கையகப்படுத்தும்
சட்டம்; தகவல் உரிமைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச்சட்டம், தொழிலாளர் உரிமைச் சட்டம்,
குழந்தைத் தொழிலாளர் உழைப்பு ஒழிப்புச்சட்டம் என இப்படி வக்கனையாக வகை வகையாக சட்டங்களை நமது
மத்திய மாநில அரசுகள் இயற்றி இயற்றி தள்ளுகின்றன. ஆனால் இவைகள் நடைமுறைக்கு
வருகிற போது தான் நாய்குட்டி போல் சுருண்டு படுத்துக் கொள்கின்றன; அல்லது எஜமானைக் கண்ட
நாய் போல் வாலை ஆட்டோ ஆட்டென்று ஆட்டுகின்றன; வாலை மட்டுமா ஆட்டுகின்றது...
அப்படியே உடம்பையே ஆட்டோ ஆட்டுன்னு ஆட்டி தனது ஏஜமான விசுவாசத்தை விண்னை முட்டிடக்
காட்டிக்கொள்கின்றன!
அப்படித்தான் மத்திய அரசு கொண்டு
வந்திருக்கும் “கல்வி உரிமைச்சட்டம்-2009”மும்! இந்த சட்டப்படி தனியார் கல்வி
நிறுவனங்கள் அனைத்தும், தனது மாணவர் சேர்க்கையில் LKG முதல் 8ஆம் வகுப்பு வரை 25% (நூறு
மாணவர்கள் என்றால் அதில் 25 மாணவர்களை) அதிலும் ஏழை எளிய மாணவர்களை கட்டாயம் சேர்க்க
வேண்டும்! கிராமமாக இருந்தால் 3 கிலோ மீட்டருக் குள்ளும், நகரமாக இருந்தால் 2 கிலோ
மீட்டருக்குள்ளும் அரசு பள்ளி இல்லை என்றால், அதற்குள் இருக்கும் தனியார் பள்ளிகளில்
சேர்க்க வேண்டும்! இவர்களுக்குரிய அரசு நிர்ணிக்கும் கல்வி கட்டணத்தை (fees) மத்திய அரசு தந்துவிடும்! ஆனாலும்
என்ன...! ஏழை பாழைகள் என்றால் அந்த குபேரபுரி கல்வி நிறுவனங்களுக்குள் புக
உரிமையில்லை! நவீன தீண்டாமை தலைவிரித்தாடும்!
இத்தகைய அடிவயிற்றில் கைவைக்கும்
சட்டத்தை ஏற்று அமலாக்குவார்களா? அந்த “கல்வி தந்தைகள்!?” இதை ஏற்க மறுத்து
நீதிமன்ற படிக்கட்டுகளை எல்லாம் இன்னும் ஏறி இறங்கிக் கொண்டும், அதன் கதவுகளைத் தட்டிக்கொண்டும்தான்
இருக்கிறார்கள் கல்வித்தந்தைகள். ஆனாலும் அது இதுவரை திறந்தப்பாடில்லை! என்றாலும்
அவர்கள் கணிதமேதை குமாரசாமி போன்ற நீதிமான்களை தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்த சட்டப்படியான நலிவடைந்தோர்
என்போர் யார்? யார்? 1. எந்த பாதுகாப்பும் இல்லாத மாணவர்; 2. குழந்தைத்தொழிலாளர்
மாணவர்; 3. மனவளர்ச்சி குன்றிய மாணவர்; 4. எச்ஐவி பாதித்த மாணவர்; 5. தலித்
மற்றும் பழங்குடி மாணவர்; 6. சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மாணவர்; 7. ஆண்டு வருமானம்
ரூ2 லட்சத்திற்கும் குறைவான குடும்ப வருமானம் உள்ள மாணவர் என நலிவடைந்த மாணவர்
பட்டியலை இச்சட்டம் வரையறுத்துள்ளது. “இப்படி” பட்டவர்களை சேர்ப்பதற்காகவா “அப்படி”ப்பட்ட
கல்வி நிறுவனங்கள் வானத்தை முட்டிக்கொண்டு நிற்கிறது?
“முதலாளித்துவம் என்பது தான் உயிர் வாழ
தன்னையே கூட அழித்துக் கொள்ளத் தயங்காது” என்கிறது மார்க்சியம்! அது எவ்வளவு பெரிய
உண்மை என்பதை பார்க்க முடிகிறது இதிலே! கல்வித் தந்தைகளே இந்த அரசாங்கத்தை “பரிபாலணம்”
செய்கிறார்கள்! ஆம்! அவர்கள் வேறு யாருமல்ல; அதானி,
அம்பானி வகையறாக்கள்தான்! அவர்களின் நலன் பேணும் அரசுகள்தான் இப்படிப்பட்ட ஓரிரு சமூகநலன்
சார் சட்டங்களையும் கொண்டுவர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி விடுகிறது! அதற்கு பல
காரணங்கள் இருந்தாலும், முக்கியமாக நலிவடைந்தோரின்... ஜனநாயகவாதிகளின்... ஓங்கிய குரல்கள்தான்
மத்திய-மாநில அரசுகளின் செவிபறையை அவ்வப் போது கிழித்து விடுகிறது; அப்படி கிழித்து
வந்ததுதான் இந்த கல்வி உரிமை சட்டம்-2009!
இந்த சட்டத்தினால் விளைந்த ஒரு
அனுபவத்தை பகிரலாம்.. சேலம் மாவட்டம் சேலம் மாநகரத் தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில்
இப்பிரச்சனையை கையில் எடுத்து போராடிய அனுபவம் மிகுந்த மதிப்பு மிக்கது. சேலம்
மாநகரம் 3 ரோடு பகுதியில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி (CBSC) இருக்கிறது. இதில் சென்ற ஆண்டு
அட்மிஷன் போது DYFI & SFI சார்பில் DYFI மாவட்டச் செயலாளர்
என்.பிரவீன்குமார், மாநகர வடக்கு செயலாளர் வி.வெங்கடேஷ், மாநகர நிர்வாகிகள் சசிக்குமார்,
சதீஷ்குமார், சக்திவேல் மற்றும் SFI மாவட்ட துணைச் செயலாளர் முத்து, உள்ளிட்
டோர் உரிய ஆவணங்களுடன் (வருமானச் சான்று; சாதிச்சான்று; இருப்பிடச் சான்று; அளவைச்
சான்று) சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம்
நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த சில மாணவர்களை அட்மிஷன் செய்திட கோரினர்.
நிர்வாகம் மறுக்கவே கொட்டும் மழையில் மாணவர்களுடன் போராடினர். போராட்டத்தின்
விளைவு 2014ஆம் ஆண்டு 18 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
அதேபோன்று இந்த (2015) ஆண்டும்
நலிந்த பிரிவினரை சேர்ப்பதில் நிர்வாகத்தினர் சண்டித்தனம் செய்தனர்; மறுபடியும்
போராட்டம்! விளைவு 39 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். 2 ஆண்டுகளில் 57 மாணவர்
சேர்க்கப்பட்டனர். LKG மாணவருக்கு வருடம் ரூ15,500; 8ஆம் வகுப்பு மாணவருக்கு வருடம் ரூ26,000 என
ஒவ்வொரு மாணவருக்கும் சுமார் 2.5 லட்சம் கட்டணம் இல்லாமல் சேர்க்கப் பட்டதென்பது
சாதாரண விசயமேயல்ல; இது அப்பகுதி மக்கள் மத்தியில் (பள்ளபட்டி, சின்னேரி வயக்காடு,
மெய்யனூர், அங்கமாள்காலணி, கோடிப்பள்ளம்) மிகுந்த நன்மதிப்பை பெற்று தந்துள்ளது
என்றால் மிகையல்ல! இதோ மாணவர்களின் பெற்றோர்கள் கருத்தைக் கேளுங்கள்!
பள்ளப்பட்டி ஷியாமிளி தந்தை
மாரியப்பன்....
“எனக்கு இப்டி ஒரு சட்டம் இருக்குன்னு தெரியவே தெரியாது; வாலிபர்
சங்கத்துக் காரங்கத்தான் சொன்னாங்க; நா பெட்ரோல் பேங்கல வேல செய்றன்; இந்த
வருமானத்துல எம்புள்ளிய எப்டி படிக்க வக்கிறதின்னு ஏங்கிகிட்டு இருந்தேன்; இருந்தாலும்
எப்பிடியாவது கடன ஒடன வாங்கியாவது பிள்ளய படிக்க வைக்கிலமின்னு எல்கேஜில சேக்க
ஸ்ரீவித்யா மந்திர் பள்ளிக்கொடத்துக்கு போனேன்; அப்ப வாலிப சங்கத்துக்காரங்க வெள்ளக்கொடி
புடிச்சிக்கிட்டு சத்தம் போட்டுகிட்டு இருந்தாங்க; அத என்னானு கேட்டேன்; சும்மாவே
சேத்தலாம் சட்டம் இருக்குன்னு பேசனாங்க; அதகேட்டுப் புட்டு, எம்புள்ளிய கூட்டிக் கிட்டு
போய் எல்கேஜி சேக்கச்சொல்லி அந்த குண்டா இருக்கிறவருக் கிட்ட கேட்டென்; அவரும்
அந்த சங்கத்துக்குக் காரங்களும் என்னென்னா சட்டிக்கேட்டு வாங்குனுமோ அல்லாம்
வாங்கி பள்ளிக்கொடத்துல சண்டப் போட்டு சேத்துட்டாங்க; ஏ வாழ்க்கையில இத மறக்கவே முடியாது!”
அங்கமாள்காலணி பரணீதரன் தாயார் பூரிணிமா....
“நா படிக்கல; ஏ மகள நல்ல படிக்க வைக்க ஆசப்பட்டென்; ஆனா அந்தளவுக்கு
கையில காசில்ல; என்னா பண்றதுன்னு தெரியாம இருந்தேன்; என் கொழுந்தனாரு வாலிப
சங்கத்துல இருந்தாரு; அவருக்கிட்ட சொன்னேன் என் ஆசைய; அவருதான் கொழந்தைய
கூட்டிக்கிட்டுபோயி, அவங்க சங்கத்துக்காரங்கெல்லாம் சேர்ந்து, சத்தம் போட்டு
ஸ்ரீவித்யா மந்திர் பள்ளிக்கொடத்துல எம்புள்ளிய எல்கேஜில சேத்துட்டாங்க;
அவுங்களுக்கு எப்டி நன்றி சொல்றதுன்னே தெரியல எனுக்கு!”
பள்ளப்பட்டி நவின் தாயார்
கிருபா...
“எங்க ஊர்ல வாலிப சங்கத்துக்காரங்க இருக்கிறாங்க; அவங்க அப்பப்ப
போராட்டம் அது இதுன்னு நோட்டீஸ் கொடுப்பாங்க; அப்பிடி ஒருநாளு கல்வி உரிம
சட்டத்தால ஏழபுள்ளிளைய்ங்கல எலவசமா சேத்தலாமின்னு ஊட்டுஊட்டுக்கு நோட்டீஸ்
கொடுத்தாங்க; அதவச்சி வாலிப சங்கத்துக் காரங்கிட்டச் சொல்லி ஏங் கொழந்தய
ஸ்ரீவித்யா மந்திர் பள்ளிக்கொடத்துல சேத்தேன்; ஆமா... சேத்தேனு ஆசைக்கு
சொல்லிக்கிலாம்... ஆனா ஒம்மையில சேத்தூத்டவீய்ங்க வாலிப சங்கத்துக் காரைங்கத்தான்;
எம்பிள்ளையும் இந்தமாதிரி ஏழையிங்களுக்கு சேவசெய்யிற வாலிப சங்கத்துலத்தான் சேத்து
வேலசெய்ய வைக்கிறது மட்டு மல்ல ஏ ஆச; எதிர்காலத்துல ஏ பிள்ளைய கலெக்டருக்கு படிக்க
வைக்குனுமிங்கிறதும் ஏ ஆச!”
நாளும் கிழமையும்
நலிந்தோருக்கில்லை என்பார்கள் அன்று! ஆனால் நாளும் கிழமையும் நலிந்தோருக்குண்டு
என்கிறார் இன்று இவர்கள் ! ஆம்! இது புது வரலாறு! அந்த வரலாற்றைத் தான் மேலே படைத்திருக்கின்றன
வாலிபர்-மாணவர் சங்கங்கள்! இங்கு மட்டுமல்ல, நாடெங்கும்தான் இது படைக்கப்பட்டு
வருகிறது! நாளும் கிழமையும் நம்வசம் ஆகவேண்டு மென்றால் அந்த ஊரில் வெண்புறாக்கள்
விண்ணிலே பறக்கவேண்டும்! ஆம்! அந்த வெண் புறாக்கள் DYFIயும்-SFIயும்! இது...! ஆயிரம் பணிகளில்
ஆக்கப்பூர்வமான பணியன்றோ! தொடரட்டும் இது! தொன்று தொட்டு வளரட்டும் இது! ஆம்!
கல்வி உரிமை சட்டம்-2009ஐ கடையருக்கும் கொண்டுசேர்ப்போம்; கைவசமாக்குவோம்; அது கடைசரக்கு
ஆகாமல் காத்திடுவோம்! நலிந்தப்பிரிவு மாணவர்களை கைதூக்கிவிடும் இச்சட்டதையும்
காத்திடுவோம்!
-பி.தங்கவேலு
இன்று 12.6.2015 தீக்கதிரில் இது வெளியிடப்பட்டு உள்ளது. நன்றி!
No comments:
Post a Comment