Saturday, 13 June 2015


“இருட்டைத் தின்றவர்கள்!”

‘இலாவி’ என அன்புடன் அழைக்கப்படும் எழுத்தாளர் இலா.வின்சென்ட் அவர்களின் இரண்டாம் தொகுப்பு “இருட்டைத் தின்றவர்கள்” என்கிற சிறுகதைத் தொகுப்பு இது! இவர் தமுஎகசவின் சேலம் மாவட்ட கௌரவத் தலைவரும்கூட! ஓய்வு பெற்ற ஆசிரியப்பெருந்தகை! பனிரென்டு கதைகள் நூற்று இருபத்தேழு பக்கங்களில் வந்துள்ளது. பனிரென்டு கதைகளும் இடர்பாடற்ற, சலிப்பற்ற வாசிப்பில் வெற்றி பெறுகிறது! ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம்! 

முதல் கதை அய்ம்பதுகளில் இந்தியக் கம்யூனிஸ்ட்களுக்கு நேர்ந்த கொடுமைகளை, குறிப்பாகச் சேலம் சிறைச் சாலையில் நேர்ந்த கொடூரத்தை, உதிரம் கொப்பளிக்கப் பேசுகிறது ‘விதைகள் உறங்காது’ கதை தியாகிகளுக்கு நினைவாஞ்சலிபோல்! ‘இருட்டைத் தின்றவர்கள்’ கதை பிரபல அரசியல் கட்சியின் ‘நாடே கேளு; ஊரே கேளு’ என்று நாறிப்போன மறைந்த சேலத்துத் தலைவரின் (?) அராஜகத்தை மிக தைரியமாகப் பேசுகிறது; இன்றைக்கு அப்படி பேசமுடியுமா? சாத்தியமா? தெரியவில்லை! எழுத்தாளர் பெருமாள் முருகன் போன்றோருக்கு தற்சமயம் நேர்ந்த ‘கதி’யை மனதில் வைத்துத்தான் சொல்கிறேன். அவ்வளவு அனல் தகிக்கிறது அந்தக்கதையில்! 

“...காக்கிச்சட்டையையும், பேண்ட்டையும் கழற்றிவிட்டு, வெறும் ஜட்டியோடு அவன் இறங்கி னான் குழியில்! பல வண்டலை மிதித்ததும் ஒரு அருவருப்பு கலந்த சூடு அவன் நரம்புக்குள் பாய்ந்தது!” இது மருந்து கதையின் நாயகன் உணர்வுநிலை! இதனால் வந்த வினையைப் பாருங்கள்... “அய்யோ...அம்மா.. அலறல்! பயங்கரமான அலறல்! நூறு கடப்பாரைகள் விரைக்குள் நுழைந்து உயிரை எடுப்பதுபோல் வலி!” இந்த வலிக்கு மருந்து யார்? எது? என்பதே ‘மருந்து’ கதை. மட்டுமல்ல “குலத்தொழிலைக் குழித்தோண்டி புதை” எனச் சமூகத்தின்மீது பளாரென ஒரு அறை! மதம்... எந்த மதமாக இருந்தாலும், வாழ்க்கைப்பாடு என்னவோ ஒன்றுதான்; சுரண்டலின் முகம் ஒன்றுதான்! இந்த ஆண்டான் அடிமை சமுதாயத்தில்! என்பதன் பதிவுகளே... ‘இலக்கணம் மாறுதோ’ ‘விசாரணை கூண்டு’ ‘என்று தணியும்’ கதைகள். 

இதிலே வித்தியாசமாக வெளிப்பட்டிருப்பது... தண்ணீர் கொள்ளையைப் பற்றிய ‘ஒரு முக்கிய அறிவிப்பு’ கதை. இந்து-முஸ்லீம் சோதரர் ஒற்றுமையை வலியுறுத்தும் ‘மண்கரடு’ கதை. வாழும் மனிதர்களின் வக்கிரங்களைப் பேசும் ‘கைநழுவி போனது’ ‘சிறப்பு விருந்தினர்’ கதைகள். ‘சிறப்பு விருந்தினர்’ கதையில், “...கத்தியின் கூரைவிட சகோரிதரிக்கு மிகுந்த வேதனையைத் தந்தது கூடி நின்றவர்களின் மௌனமே” எனக் கொடுமையை கண்டு கொதித்தெழாதக்கோரத்தைச் சுட்டிக் காட்டிவிட்டு, அடுத்து இரு சக்கர வாகனத்தில் ஒருவர் வந்து, தாக்கியவர்களை மோதி மிதிப்பது போல் வருவதும், அதற்கு முன் தாக்குதலுக்கு ஆளான சகோதரி ‘யேசுவே யேசுவே என ஜெபித் திருக்கவேண்டும்” என்பதும் கொஞ்சம் நெருடல்! வித்தியாசமான தளத்தில், மாற்றுத் திறனாளி பற்றிய பதிவாக ‘இன்னதென்று அறியாமலே’ கதை; இது சமுதாயத்தின் மீது ஒரு சாட்டையடியே! 

இந்தக் கதைகளின் மாந்தர்களோடு ஏதாவதொரு தளத்தில் பயணிப்பதுபோல் உணர்வில்... நான் மட்டுமல்ல, வாசித்த பின் நீங்களும்தான்! அதுதான் இவற்றிலுள்ள ஈர்ப்பு! இந்தக் கதைகள் எதைப் பேசுகிறதோ அது, அத்தனை உழைப்பாளிகளின் பாடுப்பொருளாக அமைந்திருப்பதுதான் மிகுந்த சிறப்பு! நியாயம், நீதி, நேர்மை, சுயமரியாதை, பகுத்தறிவு போன்ற முற்போக்குக் கீதங்கள் தமிழ் மண்ணில் ஒலிக்கவேண்டுமென எண்ணுகிறவர்களை ‘இருட்டைத் தின்றவர்கள்’ கதை தொகுப்பு நிச்சயம் கவரும்; பிடித்திழுக்கும்! மூத்த தோழர் பொன்னீலன் வார்த்தைகளில்... “எல்லாமே அன்றாட வாழ்க்கைப்பாடுகள்; சமூக வாழ்வின் நுட்பங்களின் சித்தரிப்பு; மிக யதார்த்தம்!”

முகப்பு அட்டை முதல் எல்லாமே அருமையான வடிவமைப்பு; பிழைகளற்ற அச்சேற்றம்! தமிழ் எழுத்துலக ‘ஆளுமை’களான பொன்னீலன், ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் அணிந்துரைகள்! தமிழகத்தின் தலைச்சிறந்த பதிப்பகமான பாரதி புத்தகாலயம் வெளியிடல்! எல்லாம் ஒருங்கே அமைந்த கதை தொகுப்பு ‘இருட்டைத் திருடியவர்கள்!
விலை ரூ90. தொடர்புக்கு:94437 1435. 
-பி.தங்கவேலு

இன்று (14.06.2015) தீக்கதிர் "புத்தக மேஜை"யில் இது வெளியிடப்பட்டுள்ளது; நன்றி!



No comments:

Post a Comment