Sunday, 14 June 2015





“புறம்போக்கு”

பாலு ஒரு கம்யூனிஸ்ட். குயிலி ஒரு கம்யூனிஸ்ட். பாலு தூக்குத்தண்டனை கைதி. இவரை விடுவிக்க பகிர்த முயற்சியில் குயிலியும், குழுவினரும். எமலிங்கம்... இவர் தூக்கில் போடும் குலத்தொழிலை வெறுத்து வாழ்பவர். மெக்காலே ஒரு கண்டிப்பான ஜெயில் அதிகாரி. இவர்களை சுற்றிய கதை புறம்போக்கு என்கிற பொதுவுடமை!

இயக்குனர் எஸ்பி.ஜனநாதன் எப்பொழுதுமே கணமான கதை மட்டுமல்ல, ரிஸ்க் கான கதையையே துணிச்சலாக கையாளுபவர். அப்படித்தான் புறம்போக்கும். இந்த படத்தை பார்த்துவிட்டு வருபவர்களுக்கு முன், இப்படம் அவர்களின் நினைவில் இருந்து டெலிட் ஆகும் வரை, “போடா பொறம்போக்கு” ன்னு யாரையாவது யாராவது திட்டினால், அது அவர் காதில் கேட்டால், அவரிடம் இவர் சண்டைக்கு போய் விடுவார். அந்தளவுக்கு இந்த படம் பொதுவுடமைவாதிகள் மீது நன்மதிப்பை விதைத்திருக்கிறது. அதற்காக ஆயிரம் கோடி நன்றிகள் ‘தோழர்’எஸ்பிஜேக்கு! திரைப்பட வரலாற்றில் இது ஒரு துணிச்சல்மிக்க படைப்பு. ஆம்! கம்யூனிஸ்ட்கள் காலாவதியாகி விட்டார்கள் என எள்ளி நகையாடிக் கொண்டிருக்கும் காலத்தில், இந்த தேசத்தில் கம்யூனிஸ்ட்களுக்கு “ராஜமரியாதை” தந்திருக்கும் படம் புறம்போக்கு!

படம் ஒரு இஞ்சு கூட ‘வேஸ்ட்’ என்று சொல்ல முடியாத அளவுக்கு விறுவிறுப்பாக அதேசமயத்தில் வீரியமாக செல்கிறது. இதுதான் இயக்குனர் எஸ்பிஜேவின் வெற்றி! காமெடி இல்லை; ஆனால் நையாண்டி இருக்கிறது; காதல் இல்லை; ஆனால் மனிதம் இருக்கிறது; ராஷச சண்டைகள் இல்லை; ஆனால் சாகச காட்சிகள் இருக்கிறது. மாவீரன் பகத்சிங், தூக்குமேடை பாலு (எ) பாலதண்டாயுதம், தானு, செங்கொடி என வரலாற்று ஆளுமைகளின் கதாப்பாத்திரங்கள் கண் முன்னே நிறுத்தப்படுகிறது. கம்யூனிஸ்ட்களுக்கும், தமிழ்தேசியவாதிகளுக்கும் ஒரு முடிச்சு போட்டு இருந்தாலும், அழுத்தம் கம்யூனிஸ்ட்களுக்கே!

இந்தளவுக்கு இந்திய கம்யூனிஸ்ட்களுக்கு பெருமையை சேர்த்திருக்கும், இப்படி பரந்துப்பட்ட மக்கள் வெளியில் கம்யூனிஸ்ட்களின் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தும், ஏற்படுத்திய ஒரு திரைக்காவியம் இதுவரை தமிழக திரைவானில் பறந்திருக்கிறதா? என்று எனக்கு தெரியவில்லை. (சிவப்புமல்லி கூட அது சீதனமாகத்தான் பார்க்கப்பட்டது; வர்க்கப் போராக பார்க்கப்படவில்லை). அந்தவகையில் தோழர் எஸ்பிஜே பெருமைக்கு உரியவராகிறார்; அவருக்கு நம் “லால் சலாம்!” உரித்தாகட்டும்.

தூக்குமேடை பாலுவாக ஆர்யா, தூக்குப்போடும் தொழிலாளியாக விஜய்சேதுபதி, தூக்குமேடை அதிகாரியாக ஷாம், பாலுவை காப்பாற்றும் கம்யூனிஸ்ட் குழுவின் தலைவராக கார்த்திகா... எல்லோரும் இளம் நாயகர்கள். இவர்களுடன் ஒரு ராஷச சிறைச்சாலையில் கைதிகள், காவலர்கள் என ஒரு புரட்சி காவியத்தையே பார்ப்போர் மனதில் முகச்சுளிவின்றி விதைத்து விடுகிறது புறம்போக்கு; இது நிச்சயம் வேர்விடும்; விழுதாகும்! அதற்கு சாட்சி இடைவேளையை தவிர மற்ற நேரங்களில் யாரும் திரையரங்கில் ‘வெளிநடப்போ, வெளியே இருந்து ஆதரவோ’ செய்யவில்லையே! இவ்வளவு கணமான கதையை அதுவும் கம்யூனிஸ்ட்களின் தேசபக்தியை அவர்தம் வாழ்க்கையை இமைக்கொட்டாமல், “புறம்போக்கை” பார்த்திடும் ரகசியம் என்ன? நினைத்து நினைத்து பார்க்கிறேன்; ஆம்! அதில் தமிழ்மண்ணின் வாசனையும் கலந்துள்ளதே அதன் ரகசியம்!

“இந்தியா குப்பைத்தொட்டி அல்ல” இது எவ்வளவு பெரிய முழக்கம்? இதை இன்று முழங்குபவர் யார்? கம்யூனிஸ்ட்கள்! பஞ்சம் தலைவிரித்தாடுகிறது; ஆனால் உணவு பதுக்கலை அரசே செய்கிறது; அந்த பதுக்கலை ஒழிக்க பாடுபடுவது யார்? கம்யூனிஸ்ட்கள்! இன ஒதுக்கல் நடக்கிறது; அதை எதிர்ப்பவர் யார்? கம்யூனிஸ்ட்கள்! இப்படியான விடயங்களின் முடிச்சுக்களை அல்லவா அவிழ்கிறது புறம்போக்கு.

ராஜஸ்தான் பாலைவனத்தில் உணவு ரயிலை கடத்தி, அதன் பொருட்களை பஞ்சத்தில் வாழுவோர்களுக்கு பகிர்ந்தளிக்கும் கம்யூனிஸ்ட்கள்... நாடு ராணுவ மயமாவதை எதிர்த்து மனித வெடிகுண்டாக மாறும் கம்யூனிஸ்ட்கள்... வெளிநாட்டு கைதிகள் துணையுடன் பாலு சிறையில் இருந்து தப்பிக்கும் முயற்சி... ஆனாலும் மனம் தளராது தூக்குக்கயிறை முத்தமிடுவது... தூக்கில் போடாதே; துட்டுத்தள்ளி என்று கர்ஜிப்பது... இன்றைய விஞ்ஞான தொழிற் நுட்பத்தை அப்-டேட் செய்வது... இப்படி ஏராளமான பிரமிக்க வைக்கும் காட்சிகள்! மிக பெரிய தேசபக்த யுத்தக்களத்தில் இருந்து வந்தது போன்ற உணர்வு இன்னும் நீக்கா நிலையில்! ஆம்! இனி, ஜனநாதனுக்கு நிகர் ஜனநாதனே! தோழர் ஜனநாதன் ஜனங்களின் நாதமே என்றால் மிகையல்ல.

ஒன்றிரண்டு ஊனங்கள் யதார்த்தத்தைத் தாண்டி இருக்கவே செய்கிறது. குறிப்பாக தமிழ் தேசியத்தையும், கம்யூனிசத்தையும் ஒன்றாக பார்க்கும் ஒரு பாங்கு வெளிபடுகிறது; இரு அமைப்புகளின் பணிகளும் ஒரு நேர் கோட்டுக்கு கொண்டுவரும் முயற்சி தெரிகிறது; இருந்தாலும்... புறம்போக்கு போற்றிடவே வேண்டும். பாடல்கள் இதம்; மெரினா பாடல் டாப்! பின்னணி இசை பின்னி எடுக்கிறது; படத்துக்கு இசையும், காட்சி அமைப்பும், காமிராவும் என அனைத்து தொழிற் நுட்பங்களும் உறுதுணையே! கோர்ட் காட்சி, ஜெயில் காட்சிகளில் வரும் உரையாடல் இன்றைய தமிழக சூழலைக்கு பொருந்துவதாக இருப்பதுதான் ஆச்சிரியம். புறம்போக்கு என்கிற பொதுவுடமை நம் காலத்தின் கண்ணாடி! 

தோழர் எஸ்பிஜே உள்ளிட்ட அந்த புறம்போக்கு டீம் க்கும் எழுந்து நின்று தருவோம் ஒரு நூறு “லால்சலாம்!”
-பி.தங்கவேலு


No comments:

Post a Comment